புத்தகத்தின் பெயர்: ஏன் வாசிக்க வேண்டும்

ஆசிரியர்: ஆர். அபிலாஷ்

பக்கங்கள்: 153

இந்த தலைப்பைப் பார்த்தவுடன், இந்தப் புத்தகம் ஆரம்ப நிலை (amateur) வாசகர்களுக்கு உகந்ததா என்று கேட்டால், இல்லை என்பதே என்னுடைய பதிலாக இருக்கும். இதற்கான காரணங்களைப் பார்க்கலாம்.

இந்தப் புத்தகத்தின் முதல் பாதியில் வாசிப்பின் சிறப்பையும், அது உருவாக்கக்கூடிய நல்ல பழக்கங்களையும் பற்றி எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால், பிற்பகுதியில் வரும் தொடர்ச்சியான கட்டுரைகள் ஆரம்ப நிலை வாசகர்களுக்கு சற்றே அதிகமாக (overdose போல) தோன்றக்கூடும் என்று நான் நினைக்கிறேன்.

அடுத்ததாக, சமகால எழுத்தாளர்களின் பெயர்களும், முந்தைய காலத்து எழுத்தாளர்களின் பெயர்களும் beginners-க்கு சற்று கடினமாக இருக்கலாம். இதனுடன் சேர்த்து, அயல் நாட்டுத் எழுத்தாளர்களின் பெயர்களும், அவர்களின் புத்தகங்களின் பெயர்களும் புரிந்து கொள்வதற்கு இன்னும் சிரமமாக இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி, ஆசிரியர் வழங்கும் வாசிப்பு பரிந்துரைகள் எல்லா நிலை வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, அவர் கூறும் சில 

முக்கியமான பரிந்துரைகள்.

புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க மற்றவர்களின் பரிந்துரைகளை முழுமையாகச் சார்ந்து விடக் கூடாது.

தத்துவார்த்தமான புத்தகங்களை வாசிக்கும் போது குழுவாக வாசிப்பது நல்லது.

எழுத்தாளர்களுக்கும் விமர்சகர்களுக்கும் இடையிலான ஆரோக்கியமான முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இத்தகைய அறிவுரைகள் வாசிப்பு பழக்கத்தை நம்மில் வலுப்படுத்துகின்றன.

இந்தப் புத்தகத்தில் முன்னணி எழுத்தாளர்களின் பெயர்கள் மீண்டும் மீண்டும் (repetitive-ஆக) வருகின்றன. குறிப்பாக, இக்கால எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் போன்றோரின் குறிப்புகள் அதிகமாக உள்ளன.

ஆசிரியரின் அரசியல் பார்வை மிகவும் தெளிவாக பல இடங்களில் வெளிப்படுகிறது; சில இடங்களில் அது சற்று தீவிரமாகவும் தெரிகிறது. அவர் மேற்கோள் காட்டும் சில அயல் நாட்டுப் புத்தகங்களின் மேலோட்டமான விளக்கங்களே நம்மை அந்தப் புத்தகங்களை வாங்கிப் படிக்கத் தூண்டுகின்றன.

மேலும், மேற்கத்திய வாசகர்கள் கடினமான புத்தகங்களையும் ஆழமாக வாசிக்கும் பழக்கமுடையவர்கள்; ஆனால் நம் நாட்டில் அத்தகைய புத்தகங்களைத் தேடி வாசிப்பது அரிது என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார். அதே சமயம், நாமும் அத்தகைய சவாலான புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டால், பின்னர் எளிய புத்தகங்களை வாசிப்பது பாதியில் உணவை விட்டுச் சென்றது போன்ற உணர்வைத் தரும் என்றும் கூறுகிறார். இதன் மூலம், நாமும் ஏன் அந்த வகை புத்தகங்களைத் தேர்வு செய்யக்கூடாது என்ற கேள்வி எழுகிறது.

புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கும் போது, நம் காதலி அல்லது நெருங்கிய நண்பரைத் தேர்வு செய்வதைப் போல கவனமாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். ஒரு வாசகர், சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் முன் எவ்வாறு புத்தகங்களைத் தேர்வு செய்வது என்று கேட்டபோது, “காதலி படிக்கும் கல்லூரிக்குச் சென்று அவளைப் பார்க்கும் போல், அதே நேரத்தில் சுற்றியுள்ள அழகையும் கவனிப்பது போல புத்தகக் கண்காட்சியில் சுற்றி பார்த்து தேர்வு செய்ய வேண்டும்” என்று சுவாரஸ்யமாக பதிலளிக்கிறார்.

இன்னொரு அருமையான கருத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். பொதுவாகவே வாசகர்கள், எழுத்தாளர்களை விட மேலான அறிவு கொண்டவர்களாக இருக்கிறார்கள்; அதனால் தான் வாசகர்கள் எழுத்தாளர்களை நேரில் பார்க்க அதிக விருப்பம் காட்டுவதில்லை என்று அவர் கூறுகிறார். இந்தக் கருத்து ஒரு அளவிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக உள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன