புத்தகத்தின் பெயர்: Stillness Speaks
பக்கங்கள்: 128
ஆசிரியர்: Eckhart
இந்தப் புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், நான் ஏற்கனவே அறிந்த சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
“React to nothing” என்ற கருத்து புதிதானது அல்ல. நம்மில் பலரும் நம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் புத்தகங்களைத் தேடி வாசித்திருப்போம். Emotional Intelligence குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் மொழிபெயர்ப்பாகவும், தமிழ் ஆசிரியர்களால் எழுதப்பட்டதாகவும் கிடைக்கின்றன. இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட நூலை (அல்லது சொல்லப்போனால், ஒரு மோட்டிவேஷனல் கட்டுரை போல உணரப்படும் இந்த நூலை) நான் தனிப்பட்ட முறையில் குறிப்பிட விரும்புகிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு, YouTube-இல் நான் பார்த்த ஒரு காணொளிதான் இதற்கான தொடக்கப் புள்ளி. நாம் வழக்கமாக மிகுந்த சோர்வாகவும், மனவலிமை குறைந்தவர்களாகவும் இருக்கிறோம் என்று நாமே நம்மை எண்ணிக்கொள்கிறோம். சின்ன விஷயத்திற்கே உடைந்து போகிறோம். ஏதாவது செய்துவிட்டு, “ஏன் இப்படிச் செய்தோம்?” என்று நம்மையே நொந்து கொள்கிறோம்.
உதாரணமாக, யாராவது நம்மிடம் கடுமையாகப் பேசினால் அல்லது பொதுவெளியில் நம்மை அவமதித்தால், உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு பதிலளிக்கிறோம். அந்த நிமிடத்தில் அது நமக்கு ஒரு ஆறுதலாகத் தோன்றலாம்; நம்முடைய ஈகோ திருப்தி அடையும். ஆனால் சில நேரம் கழித்து, அதன் விளைவுகளை உணரும்போது, “இதை இப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை” என்ற எண்ணம் மனதை வருத்துகிறது. இப்படியான உள் முரண்பாடுகளை நாம் எல்லோரும் அனுபவித்திருக்கிறோம்.
இங்கேதான் “React to Nothing” என்ற கருத்து முக்கியமாகிறது.
நாம் ஒரு விஷயத்திற்கு உடனடியாக ரியாக்ட் செய்தால், அந்த விஷயத்தின் மீது நமக்கு அதிகாரம் இருப்பதாக நினைக்கிறோம். ஆனால் உண்மை அதற்கு நேர்மாறானது. நாம் ரியாக்ட் செய்யும் அந்த தருணத்தில்தான், நம் சக்தியை அந்த சூழ்நிலைக்கே ஒப்படைத்துவிடுகிறோம்.
ஒரு பிரச்சனை வருகிறது. சிலர் நம்மை குறிவைத்து, பொதுமக்கள் முன்பு திட்டுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள். அதற்கு உடனே பதிலடி கொடுத்தால், நம் ஈகோக்கு அது சரியாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், அது நம் சக்தி அல்ல. அதற்கு பதிலாக, அந்த அவமானத்தையும், அந்த தருணத்தையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு, உடனடியாக எதையும் செய்யாமல் நிறுத்தி, சிறிது நேரம் கழித்து—அல்லது சரியான தருணத்தில்—பதில் அளிப்பது தான் மிகுந்த சக்தி வாய்ந்த செயல்.
“Stillness helps us recognize our own mental and emotional reactive patterns.
When we have no way to escape the present moment, we begin to welcome it and befriend it.
Take responsibility for the moment, not for life.”
இது சொல்ல எளிது; நடைமுறையில் கடினம்.
நாம் தினமும் சின்ன சின்ன விஷயங்களுக்காக ரியாக்ட் செய்து, கருத்து வேறுபாடுகளில் சிக்கி, மனஅழுத்தத்தில் வாழ்கிறோம். அதற்கு பதிலாக, “நான் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்; நீ சொல்வது என்னை நிர்ணயிப்பதில்லை” என்ற மனநிலையைப் பயிற்சி செய்ய முடியாதா?
இந்த எண்ணங்களையே அந்த காணொளி விதைத்தது. அதன் பிறகு இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நூலை வாங்கினேன். ஆசிரியர் ஏற்கனவே The Power of Now போன்ற புகழ்பெற்ற நூலை எழுதியவர் என்பதும் கவனத்தை ஈர்த்தது.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது, “அமைதி” (Stillness) என்ற கருத்து என்னை மிகவும் பாதித்தது.
அமைதி என்பது வெறும் பேசாமல் இருப்பது அல்ல. அது நமக்குள் இருக்கும் ஒரு ஆழமான விழிப்புணர்வு. நம்மை நாம் எவ்வளவு கட்டுப்படுத்துகிறோம் என்பதின் அளவுகோல்.
“When a human being becomes still, they go beyond their thoughts.”
ஆசிரியர் “Awareness” பற்றி பேசுகிறார்.
Awareness என்பது வெளியில் எதையாவது தேடுவது அல்ல; நமக்குத் தேவையானது என்ன, தேவையில்லாதது என்ன என்பதை நாமே உணர்ந்து நிர்வகிப்பது. அதுவே உண்மையான விழிப்புணர்வு.
அவர் “Listening to Silence” என்ற ஒரு அழகான கருத்தை முன்வைக்கிறார்.
அமைதி எங்கும் இருக்கிறது:
ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவில்
ஒரு எண்ணத்துக்கும் இன்னொரு எண்ணத்துக்கும் இடையில்
இசையில், ஒரு நோட்டுக்கும் இன்னொரு நோட்டுக்கும் இடையே
மூச்சை உள்ளே இழுக்கும் தருணத்துக்கும் வெளியே விடும் தருணத்துக்கும் இடையில்
இந்த இடைவேளைகளில் இருக்கும் அமைதியை நாம் கவனிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார்.
இயற்கையையும் எடுத்துக்காட்டாகக் கூறுகிறார்.
ஒரு செடி, ஒரு மலர்—அவை எந்த அவசரமும் இன்றி, இயற்கையின் விதிப்படி வளர்ந்து, மலர்ந்து, மணம் பரப்புகின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் கடந்த காலம், எதிர்காலம் என்ற எண்ணங்களில் சிக்கி, நிகழ்காலத்தை இழக்கிறோம்.
Stillness நமக்குள் இருக்கும் மனநிலை மற்றும் உணர்ச்சி சார்ந்த Reactive Patterns-ஐ அடையாளம் காண உதவுகிறது. அந்த அமைதியில்தான், நாம் நம்மை உண்மையாகப் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம்.
“When we name an incident as ‘bad’, it creates emotional contraction within us.
When we let it be without naming, we experience an enormous sense of power.”
ஆசிரியர் மேலும் கூறுவது:
நம்முடைய எல்லா எண்ணங்களும் மிக முக்கியமானவை என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், எண்ணங்கள் வந்து போகும் மேகங்கள் போல. Thinking என்பது பிரச்சனையை மீண்டும் மீண்டும் சுழற்றுவதற்காக அல்ல; சரியான தீர்வை காண உதவுவதற்காக.
Reactive நிலையில் இருந்து வெளியே வந்து, அமைதியுடன் சிந்திக்கும்போதுதான் உண்மையான தீர்வு கிடைக்கிறது. Ego-வின் அடிப்படையில் வரும் எண்ணங்கள்—பொறாமை, குற்ற உணர்வு—இவையெல்லாம் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான் என அவர் விளக்குகிறார்.
இறுதியாக, அவர் மீண்டும் “Now” என்ற கருத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறார்.
நாம் கடந்த காலத்திலும் இல்லை, எதிர்காலத்திலும் இல்லை.
இந்த தருணத்தில்—இந்த நொடியில்தான்—நாம் உண்மையில் இருக்கிறோம்.
அதனை ஏற்றுக்கொள்வதே (Surrender) உண்மையான விடுதலை.
தேவையில்லாத எதிர்வினைகளை விட்டுவிட்டு, இந்த நொடியை முழுமையாக வாழ கற்றுக்கொள்வதே இந்தப் புத்தகத்தின் மையச் செய்தி.
