Gen Z தலைமுறையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நூல், நாம் அன்றாடம் சமூக வலைதளங்களில் பார்க்கும் ரீல்ஸ், வீடியோக்கள் போன்றவற்றின் பின்னணியில் இருக்கும் உண்மையான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது.
பொதுவாக நாம் அந்த தலைமுறையினரை கேலியாகப் பேசுவோம். சில நேரங்களில் அவர்களின் செயல்களை வேடிக்கையாகவும், சில சமயங்களில் பொறாமையுடனும் பார்த்திருப்போம். ஆனால் அந்த Gen Z தலைமுறை சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களையும், அவர்கள் கொண்டு வந்த சமூகப் புரட்சியையும் இந்த நூல் மிக அழுத்தமாகவும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் விளக்குகிறது.
ஆம், 2K கிட்ஸ், சென்டினியல்ஸ் (Centennials) என அழைக்கப்படும் இந்த Gen Z தலைமுறையினர்தான் இன்றைய சமூக மாற்றங்களின் முக்கிய காரணிகளாக உருவெடுத்துள்ளனர் என்பதை ஆசிரியர் இந்த நூலின் மூலம் தெளிவுபடுத்துகிறார்.
ஆசிரியர் இந்த புத்தகத்தின் எல்லா அத்தியாயங்களிலும் ஒரு தெளிவான பேட்டர்னை முன்னிறுத்துகிறார். வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய பல விஷயங்களை இணைத்துள்ளார். ஒவ்வொரு அத்தியாயத்திலும், முதல் பகுதி உண்மையில் நடந்த நிகழ்வுகளை விவரிக்கிறது. இரண்டாம் பகுதியில் அந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் இருந்த Gen Z தலைமுறையின் பங்களிப்பை விளக்குகிறார். பின்னர் அதில் உள்ள சில நெகட்டிவ் அம்சங்களை மெதுவாகத் தொட்டு, இறுதிப் பகுதியில் டீசர் கேள்விகளுடன் அத்தியாயத்தை முடிக்கிறார். இது அடுத்த அத்தியாயத்தை வாசிக்க வேண்டிய ஆர்வத்தை தூண்டுகிறது.
புத்தகம் முழுவதும் நிறைந்துள்ள புள்ளிவிவரங்கள் (Statistics) மூலம், ஆசிரியர் கூறிய கருத்துகள் அனைத்தையும் உறுதிப்படுத்துகிறார். பல உண்மையான சம்பவங்கள் வாசகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளன. எடுத்துக்காட்டாக, பெங்களூரில் நடைபெறும் ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட ஒரு Gen Z இளைஞர், மனித தோலின் நிறத்தை வரையும்போது ஒரே நிறத்தை மட்டுமே பரிந்துரைத்ததை கேள்வி எழுப்புகிறார். “மனித தோல் நிறம் ஏன் பழுப்பு அல்லது கருப்பாக இருக்கக்கூடாது?” என்ற கேள்வியுடன், ஹிந்துஸ்தான் பென்சில் என்ற முன்னணி நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். அந்த வழக்கில் வெற்றியும் பெறுகிறார். இதன் தொடர்ச்சியாகவே ‘Fair & Lovely’ என்ற தயாரிப்பு ‘Glow & Lovely’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
மேலும், 54321 டெக்னிக் என்ற ஒரு முறையையும் ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார். இது Gen Z தலைமுறையினரிடையே பிரபலமாக உள்ளது. அதாவது, மனஅழுத்தம் அல்லது ஸ்ட்ரெஸ் உள்ளவர்கள் ஐந்து விஷயங்களைப் பார்த்து சொல்ல வேண்டும், நான்கு விஷயங்களை கையால் தொட வேண்டும், மூன்று விஷயங்களை கேட்க வேண்டும், இரண்டு முறை புன்னகைக்க வேண்டும், பின்னர் ஒரு விஷயத்தை சுவைத்து உணர வேண்டும். இவ்வாறு செய்தால், ஆன்சைட்டி போன்ற மனஅழுத்த உணர்வுகள் குறையும் என குறிப்பிடுகிறார்.
அதேபோல், ஆண்–பெண் இருபாலருக்கும் இடையே ஏற்படும் பல்வேறு ரிலேஷன்ஷிப் நிலைகள், situationship, textationship போன்ற தொடர்பு வடிவங்களை எடுத்துக்கொண்டு விரிவாக விளக்குகிறார்.
இதற்கு முன் இருந்த தலைமுறைகளின் பரிசளிக்கும் முறைகள் இப்போது முழுமையாக மாற்றம் அடைந்துள்ளன என்றும் ஆசிரியர் கூறுகிறார். Gen Z தலைமுறையினர் பெரும்பாலும் Netflix subscription, Amazon vouchers போன்ற virtual பரிசுகளையே வழங்குகின்றனர். கூடுதலாக, டெல்லியைச் சேர்ந்த ஒரு Gen Z இளைஞர் தனது காதலிக்காக ஒரு grievance portal உருவாக்கி அன்பளிப்பாக வழங்கிய சம்பவத்தையும் குறிப்பிடுகிறார்.
வயது வித்தியாசத்தின் அடிப்படையில் தலைமுறைகளை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்துகிறார். 30 முதல் 45 வயதுக்குள் உள்ளவர்கள் மில்லேனியல்ஸ் என்றும், 60 முதல் 80 வயதுக்குள் உள்ளவர்கள் பேபி பூமர்ஸ் என்றும் வகைப்படுத்தப்படுகின்றனர்.
அலுவலக சூழலில் Gen Z தலைமுறையினர் எவ்வாறு தங்கள் பணிகளை கையாள்கிறார்கள் என்பதையும் ஆசிரியர் சிறப்பாக எடுத்துரைக்கிறார். உதாரணமாக, “உயரதிகாரிகள் நம்மைப் பற்றி தவறாக நினைத்துவிட்டால் என்ன செய்வது?” என்ற முந்தைய தலைமுறையினருக்கிருந்த தயக்கங்கள், இந்த தலைமுறையினரிடம் இல்லை என்று குறிப்பிடுகிறார்.
ஒரு இடத்தில், ஒரு ஊழியர் leave apply செய்தபோது, “உனக்கு ஏன் leave?” என்று HR கேட்டதற்கு, “எனக்கு breakup ஆகிவிட்டது. அதனால் மலைப்பகுதிக்கு சென்று, மனதையும் உடலையும் சீர்செய்து, நல்ல vibes உடன் திரும்ப வருகிறேன்” என்று நேரடியாக பதிலளித்த சம்பவத்தையும் பதிவு செய்கிறார். இந்த நிகழ்வை அந்த HR மேனேஜர் தனது Twitter பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
மேலும், Gen Z தலைமுறையினர் தங்களின் நிதி நிர்வாகத்தை எவ்வாறு கவனமாக கையாள்கிறார்கள் என்பதையும் சில எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார்.
புத்தகத்தின் இறுதியில், Gen Z தலைமுறையின் நெகட்டிவ் அம்சங்களையும் ஆசிரியர் எடுத்துரைக்கிறார். இருந்தபோதிலும், முந்தைய தலைமுறைகளை ஒப்பிடும்போது, Gen Z தலைமுறையினர் ஒரு நல்ல மனித ஆற்றலை நோக்கி நகர்கின்றனர் என்ற பாசிட்டிவான முடிவை வழங்குகிறார்.
இந்த புத்தகம் அனைவரும் குறைந்தது ஒரு முறை வாசித்துத் தீர வேண்டிய ஒன்று. ஏனெனில், நம்மைச் சுற்றியுள்ளவர்கள்—அலுவலக சக ஊழியர்களாக இருந்தாலும், பக்கத்து வீட்டுக்காரர்களாக இருந்தாலும்—அவர்களில் பாதி பேர் Gen Z தலைமுறையினரே. அவர்களை புரிந்துகொண்டு, அவர்களுடன் இணைந்து பயணிப்பதே இன்றைய காலத்தின் அவசியம். இது நமது வீட்டிற்குள்ளும் சரி, சமூகத்திலும் சரி. நாம் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டுமென்றால், இந்த தலைமுறையை புரிந்துகொள்வது மிக முக்கியமான ஒன்றாகும்.
