“தவ்வை” என்னும் சொல், சில பகுதிகளில் பெண் காவல் தெய்வம் என்ற பொருளை வழங்குகிறது. காவல் தெய்வம் என்றால், உக்கிரமான வடிவத்தில், ஆயுதங்களுடன் எதிரிகளை எதிர்த்து நம்மை பாதுகாக்கும் சக்தியின் உருவமாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த நாவலில் வருகிற தவ்வை என்ற பெண், அத்தகைய தெய்வமாக அல்ல; இந்தியா போன்ற நாடுகளில், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருத்தியாக இருந்துகொண்டிக்கிற பெண்களாக, அமைதியான காவல் சக்தியாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டிருக்கிறார்.

ஆசிரியர்: அகிலா

பாக்கங்கள்: 206

வெளியீடு: Discovery Book Palace

இந்த நாவலை வாசித்து முடிக்கும் போது, வாசகனின் இதயம் சற்று கனமாக மாறுவது இயல்பே. தவ்வையின் இளமை கால அழகை எவ்வளவு நுணுக்கமாக விவரித்தாரோ, அதே அழகை அவளின் கடைசி காலத்திலும் சிறிதும் குன்றாமல் காட்டியிருப்பது, ஆசிரியரின் ஆழ்ந்த எண்ண முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

அப்பா இல்லாமல், தாயின் வற்புறுத்தலால் ஒரு பெரிய குடும்பத்திற்கு மருமகளாகச் செல்லும் தவ்வையின் வாழ்க்கை, பெயரளவில் பெரியதாக இருந்தாலும் மனதளவில் சுருங்கிய குடும்பத்தில் தொடங்குகிறது. கணவனின் கொடுமை, மாமியாரின் வற்புறுத்தல் என அவளது வாழ்க்கை தவ்வையின் பார்வையிலேயே விரிகிறது. அந்த வீட்டில் அவளுக்கான ஒரே ஆறுதல், கணவனின் தந்தை சங்கரலிங்கம் மட்டுமே.

தன் இயலாமையை மறைக்க, கணவன் தவ்வையை மனதாலும் உடலாலும் கொடுமைப்படுத்துகிறான். இதை வெளியில் சொன்னால் இன்னும் மோசமான நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை உணர்ந்து, தவ்வை யாரிடமும் சொல்லாமல் அனைத்தையும் தனக்குள் புதைத்து தாங்கிக் கொள்கிறாள். தன் தாயிடம் சொன்னாலும் தீர்வு கிடைக்காது என்ற நம்பிக்கையின்மை, அவளை கணவனின் முடிவுகளுக்கு உடன்படச் செய்கிறது.

கதை நகரும் போது, தவ்வையின் அழகும், அவளது அடங்கிய அழுகையும் வாசகனின் நெஞ்சை கரைக்கின்றன. நடந்த அனைத்தையும் யாரிடமும் பகிராமல், மூன்றாம் தலைமுறை வரை சிரிப்பும் கண்ணீருமாக வாழும் அவள், தன் வாழ்க்கையின் சுமைகளை மௌனமாக சுமக்கிறாள்.

மகனையும் பேரக்குழந்தைகளையும் பிரிந்து, மாமனாரின் வேண்டுகோளுக்கிணங்க, சொந்த ஊரில் ஒரு சிறிய வீட்டில் முதுமையை அனுபவிக்கும் தவ்வை, கொள்ளுப்பெயரன் வரும்போது நினைவுகளை மீட்டெடுக்கிறாள். ஆனால் தன் மனதில் புதைந்து கிடக்கும் தீர்க்க முடியாத ரகசியத்தை வெளியில் வர விடாமல் பாதுகாக்கிறாள்.

அந்த உண்மையை தன் பெயர்த்தி வைஷாலி கண்டுபிடித்து, “உனக்காக உன் வீட்டில் ஒரு பொருள் வைத்திருக்கிறேன்; நான் ஊருக்குச் சென்ற பிறகு அதை அழாமல் எடுத்து பார்க்க வேண்டும்” என்று பாட்டியிடம் கூறும் தருணம், கதையின் உச்ச உணர்ச்சியாக அமைகிறது.

அந்த ரகசியத்தை வெளிப்படுத்தாமல், பாட்டியின் மௌன வரிசையில் வைஷாலியும் சேர்ந்து கொள்கிறாள் என ஆசிரியர் முடித்திருப்பது, வாசகனின் இதயத்தை கனக்கச் செய்கிறது.

கதையின் இறுதியில், அந்த ஊரின் காவல் அம்மனான செல்லியம்மனும், பாட்டி தவ்வையும் ஒன்றே என்ற உணர்வு வெளிப்படுகிறது. ஆண்களின் இயலாமை, ஆதிக்கம் (dominance) போன்ற விஷயங்களை நேரடி பெண்ணிய பிரச்சாரமாக மாற்றாமல், மனித வாழ்க்கையில் நடந்ததும் நடந்து கொண்டிருப்பதையும் இயல்பாகச் சொல்லி, தனது எழுத்து நடையில் வாசகனின் கண்களை மெதுவாக ஈரமாக்குகிறார் ஆசிரியர்.




Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன