புத்தகத்தின் பெயர்: இளமையில் கொல்
பக்கங்கள் : 112
ஆசிரியர்: சுஜாதா

இந்த நாவலானது சுஜாதா அவர்களால் எண்பதுகளில் எழுதப்பட்டது. இந்தப் புத்தகம் இரண்டு குறுநாவல்களைக் கொண்டுள்ளது.

  1. இளமையில் கொல்
  2. தப்பித்தால் தப்பில்லை

முதலாவது இளமையில் கொல். இந்தக் கதையானது ஒரு நட்பின் பிணைப்பில் எழுதப்பட்டது ஆக இருக்கிறது. கதிர்வேலன் மற்றும் ரங்கராஜன் இவர்களுடைய நட்பைப் பற்றியே இங்கு பெரும்பாலும் பேசப்பட்டுள்ளது. செய்யாத தப்பிற்கு கதிர்வேலனுக்கு எதிராக ரங்கராஜன் சொல்லும் பொய் சாட்சியானது கதிர்வேலனை மிகவும் வருத்தப்பட வைக்கிறது. இதனால் அவனுக்கு காவல் நிலையத்தில் நிறைய அடி உதைகளும் விழுகின்றன. ஆனால் ரங்கராஜன் இயற்கையாகவே நல்ல குணம் படைத்தவன். அவனுக்கு பொய் சாட்சி சொல்ல மனமில்லாத போதும், தனது அண்ணன் மற்றும் போலீசாரின் நிர்பந்தத்தால் அந்த சாட்சியை சொல்லுகிறான். அதனுடன் சேர்ந்து கதிர்வேலனிடம் பகையையும் வளர்த்துக் கொள்கிறான்.

ரங்கராஜன் தனது தோழியான அர்ச்சனாவை மிகவும் விரும்புகிறான். ஆனால் அர்ச்சனாவோ கிரிஷ் குமார் என்ற ஆண் நண்பருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். கிரிஷ் குமார் அர்ச்சனாவை துன்புறுத்தி வருகிறான். இதனால் அர்ச்சனாவுக்கு ரங்கராஜன் மீது சினேகம் ஏற்பட்டு இருவரும் பழகிக் கொள்கின்றனர். ரங்கராஜன் அர்ச்சனாவின் நிலைமையை அறிந்து கிரிஷ் குமாரை சந்திக்கப் போகிறான். ஆனால் அங்கு அவர் பிணமாக இருக்கிறார். அதே நேரத்தில் கதிர்வேலனையும் அவர் எதிர்கொள்கிறான்.

இதனால் கதிர்வேலன் தக்க சமயத்தில் பழி தீர்ப்பதற்காக அவனும் பொய் சாட்சி சொல்ல, போலீஸ் உதவியுடன் நீதிமன்றத்தை நாடுகிறான். இங்கு ரங்கராஜன், கண்டிப்பாக நமது நண்பன் கதிர்வேலன் நமக்கு எதிராக பொய் சாட்சி தான் சொல்லப் போகிறான் என்று யூகிக்கையில், கதிர்வேலனோ இல்லை, நான் அவனை அர்ச்சனா வீட்டில் பார்க்கும் பொழுது கிரிஷ் குமார் ஏற்கனவே பிணமாக கிடந்தார் எனக் கூறுகிறான்.

பின் நீதிபதி கதிர்வேலனை “ஏன் நீங்கள் காவலரிடம் பொய் சாட்சியம் சொன்னீர்கள்?” எனக் கேட்கையில், அதற்கு கதிர்வேலன் “இல்லை, இதற்கு முன் நான் அகப்பட்ட ஒரு வழக்கில் ரங்கராஜன் எனக்கு எதிராக பொய் சாட்சி சொல்லி நான் அதில் மிகவும் மனம் வருத்தம் அடைந்தேன். அதைப் பழித்திருக்கவே போலீஸிடம் அவ்வாறாக கூறினேன். ஆனால் இப்போது கூறுகிறேன், ரங்கராஜன் அந்த தவறை செய்யவில்லை” என்கிறான்.

இப்போது ரங்கராஜனும் கதிர்வேலனும் பேசிக் கொள்கின்றனர். ரங்கராஜனுக்கு கதிர்வேலனின் நட்பை ஆழமாக உணர்கிறான். இவ்வாறாக கதை முடிகிறது.

இதற்குப் பின் ரங்கராஜனின் அண்ணன் மற்றும் அவருடைய மனைவி இருவரின் கதாபாத்திரங்கள் நகைச்சுவைக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. ரசிக்கும்படியாகவும் உள்ளது. ஏதோ ஒரு இடத்தில் உறவை மீறினாலும், நாம் கதைதான் படிக்கிறோம் என்று எண்ணும்போது அது அவ்வளவு பெரிதாக தெரிவதில்லை.

இரண்டாவது கதை தப்பித்தால் தப்பில்லை. இந்தக் குறுநாவலில் பாலகிருஷ்ணன், அவனுடைய மனைவி சாரதா, அலுவலக தோழி சுபா இவர்களுக்கு இடையில் நடக்கிறது. இது மனைவியின் துரோகத்தைப் பற்றிய கதை.

காண்ட்ராக்டர் ஆக வரும் மஞ்சிநாதனிடம் ஏற்படும் உறவை மீறிய பழக்கத்தால், பாலகிருஷ்ணனின் மனைவி சாரதா மஞ்சுநாதனை படுக்கை அறை வரை அனுமதிக்கிறார். இதை கண்ணால் கண்ட பாலகிருஷ்ணன் மிகவும் துயரப்படுகிறார். அவர் ஒரு இன்ட்ரோவர்ட் என்பது கதையின் தொடக்கத்திலேயே விவரிக்கப்பட்டுள்ளது.

அந்த காலகட்டத்தில் ஒரு விதமான கொலைகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இந்த நிகழ்வை பயன்படுத்தி பாலகிருஷ்ணன் தன் மனைவியை தீர்த்து கட்ட முடிவு பண்ணுகிறான். அந்த நிஜ கொலை நிகழ்வைப் பொறுத்து ஒரு சுத்தியலும் கயிறையும் தயார் செய்கிறான். அதாவது சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து, பின் கயிற்றால் கழுத்தை நெரித்து கொல்வதாக திட்டம் தீட்டுகிறான்.

ஒரு கட்டத்தில் பாலகிருஷ்ணன் இறக்கப் போகும் மனைவியிடம் “உனக்கு எதுவும் வேண்டுமா?” என்று கேட்கிறான். அப்போது மனைவி “எனக்கு துணி காய போட கொடி கட்டி தாருங்கள்” என கேட்கிறாள். அதே மாதிரி ஒரு சுத்தியலும் கயிற்றையும் எடுத்து கொடுக்கிறாள். இதை தனது திட்டத்தின் ஆயுதமாக கருதிக் கொண்டு, அவள் சொன்னது போல் கொடிகளை கட்டிக் கொடுக்கிறான். அதே சுத்தியலையும் மீதமுள்ள கயிற்றையும் பத்திரமாக அலமாரியில் வைத்துக்கொள்கிறான்.

அதன் பின் சாரதா “எனக்கு பால்கனியிலும் ஒரு கொடி கட்டி தாருங்கள்” எனக் கூறுகிறாள். பாலகிருஷ்ணன் “கட்டி தாரேன், இப்போது நான் பெங்களூர் சென்று வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு வெளியே வந்து மஞ்சுநாதனை சந்திக்கிறான். மஞ்சுநாதன் சாக அடிக்க வேண்டும் என்ற முயற்சியில் இருந்தாலும், அவனுக்கு அது அப்போது சரியாக தெரியவில்லை. அவன் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். அதனால் திரும்பவும் வீட்டுக்கு வருகிறான் மனைவியை கொல்ல.

அப்போது அவள் ஹாலில் உறங்கிக் கொண்டிருக்கும்போது, சுத்தி எடுத்து மெத்தையின் மேல் உட்கார்ந்து, ஓங்கி தலையில் அடிக்கும் பொழுது—

அடுத்து சீன் ஆபீஸில் நடக்கிறது. அங்கு பாலகிருஷ்ணன் அழுது கொண்டே இருக்கிறான். சுபா “ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?” என்று அக்கறையாக கேட்கிறாள். அப்போது பாலகிருஷ்ணன் “வேண்டாம், என்னிடமிருந்து கேட்காதே” என்கிறான்.

பின்னும் மனம் வருந்தி சுபாவை கூப்பிட்டு நடந்ததை கூறுகிறான். பின் சுபா கேட்கிறாள், “மெத்தையில் மேலே உட்கார்ந்து தலையில் அடித்துக் கொன்று விட்டீர்களா?” எனப் பதற்றத்தோடு.

அப்போது பாலகிருஷ்ணன் “இல்லை, நான் அவ்வளவு தைரியசாலி இல்லை. நான் ஒரு கோழை. நான் கையை ஓங்கும் பொழுது, என் மனைவி முழிப்பு வந்து ‘ஏன் இப்படி சுத்தியலோடு உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டாள். நான் வேறு வழி இல்லாமல் ‘பால்கனியில் கொடி கட்ட போகிறேன்’ என்று சொல்லி விட்டேன்” என்று அழுகிறான்.

(இதை படிக்கும் பொழுது என் பற்கள் தெரியாமல் சிரித்துக் கொண்டேன்.)

“என்னை மாதிரியான ஒரு ஆம்பளையும் இருக்க மாட்டான்” என்று வருந்தி அழும்போது, சுபா “இல்லை, நீங்கள் தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டியது தான் தவறு. மனைவி கணவனுக்கு துரோகம் இழைப்பது இங்கே சகஜம் தான். அதற்காக அவளை கொல்வதுதான் சரி என்பது தவறு” என்று சொல்லித் தேற்றுகிறாள்.

பின் “எப்படி அவளை பழிவாங்க வேண்டும்?” என கேட்கும் பொழுது, சுபா அவனுடைய கையை எடுத்து தன் மடியில் வைத்து “நான் உங்களை இரண்டு வருடங்களாக கண்காணித்துக் கொண்டு வருகிறேன். உங்களால் என் மனதை உணர முடியவில்லை” என்று காதலோடு கூறுகிறாள்.

“உங்கள் மனைவியோ அவ்வளவாக படிக்கவில்லை. அவர் உங்களை சார்ந்து தான் இருக்கிறார். அவர் செய்தது சரி என்றால், நாம் இப்படி இருக்கிறது எந்த தவறும் இல்லை” என்று இக்கதை முடிகிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன