புத்தகத்தின் பெயர்: ஆலம்
ஆசிரியர்: ஜெயமோகன்
பக்கங்கள்: 232
வகைமை: த்ரில்லர் / மனவியல் / வன்முறை
“ஆலம்” — இந்த சொல்லுக்கு “நஞ்சு” என்பது பொருள். அந்த பொருளுக்கேற்ப, இந்த நாவலும் முழுவதும் இரத்தமும் வன்முறையும் நிரம்பிய, தீவிரமான வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. முதலில் இது ஒரு web series ஆக எழுதப்பட்டதாக ஆசிரியர் கூறினாலும், அது நடைமுறைக்கு வராமல், இறுதியில் நாவல் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கதையின் மையத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்கள் உள்ளன. சேது, கோப்ரா, சந்தானம், வீராச்சாமி, வீரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்கள். ஆரம்பத்தில் இது சாதாரண குடும்பத் தகராறு போல தோன்றினாலும், கதையின் ஆழத்தில் செல்லும் போது, அனைத்து கொலைகளுக்கும் பின்னால் சந்தானத்தின் திட்டமிட்ட பழிவாங்கும் எண்ணமே காரணம் என்பதை அறிய முடிகிறது.
தன் மகன் தவறாக கொல்லப்பட்டதன் கோபத்தில், சந்தானம் ஒரு பெரிய வலைப்பின்னலை பயன்படுத்தி, எதிர் குடும்பத்தை முழுமையாக அழிக்க திட்டமிடுகிறான். அந்த குடும்பத்தில் ஒரே வாரிசும் உயிருடன் இருக்கக் கூடாது என்பதே அவன் நோக்கம். இந்த பழிவாங்கும் மனநிலை, கதையை மிகுந்த தீவிரத்துடன் முன்னேடுக்கிறது.
ஜெயமோகன், மனிதனுக்குள் இருக்கும் வக்கிர புத்தியை ஒரு நோயுடன் ஒப்பிட்டு மிக நுட்பமாக சித்தரிக்கிறார். குறிப்பாக, நாய்களுக்கு பரவும் ஒரு பஞ்சஸ் (fungus) நோயை எடுத்துக்காட்டாக கூறி, அது காற்றில் பரவி, ரத்தத்தில் கலந்து, உயிரையே அழிக்கும் விதத்தை விவரிக்கிறார். இதே உருவகம் மனிதர்களுக்கும் பொருந்துகிறது என்ற தத்துவம், கதையின் இறுதியில் கோப்ரா என்ற வழக்கறிஞர் மூலம் வெளிப்படுகிறது. மனிதர்களிடையே பரவும் இந்த வக்கிர புத்தி, ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவி, இறுதியில் மனிதனையே அழிக்கும் “நஞ்சு” போல செயல்படுகிறது.
நாவலில் பல இடங்களில் கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஆனால் அவை கதையின் சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பாகவே உள்ளன. நகைச்சுவை அம்சங்கள் இல்லாதது சிறிய குறையாக தோன்றலாம். சரளா என்ற கதாபாத்திரத்திற்கு மேலும் இடம் அளித்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.
மொத்தத்தில், “ஆலம்” ஒரு சாதாரண த்ரில்லர் அல்ல. மனித மனத்தின் இருண்ட பக்கங்களையும், பழிவாங்கும் உணர்வின் அழிவூட்டும் சக்தியையும் வெளிப்படுத்தும், தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் நாவல்.
