புத்தகத்தின் பெயர்: இரண்டாவது தாலி
ஆசிரியர்: ராஜேஷ் குமார்
பக்கங்கள்: 246
ராஜேஷ் குமார் எழுதிய “இரண்டாவது தாலி” நாவல், வழக்கமான அவரது த்ரில்லர் பாணியில், காதல், குடும்பம் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் கலந்த ஒரு சுவாரஸ்யமான கதையாக அமைந்துள்ளது. கதையின் மையத்தில் சுபமதி, சுந்தரம், புவனேந்திரன், பன்னீர்செல்வம் மற்றும் ஷ்யாம் ஆகிய முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர்.
கதை கல்லூரி வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது. கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சி காரணமாக காட்டுப் பகுதிக்கு செல்லும் போது, அங்கே சுபமதி புவனேந்திரனை சந்தித்து காதலில் விழுகிறாள். ஆனால் அவளது தந்தை பன்னீர்செல்வம், தன் சகோதரியின் மகனான சுந்தரத்தையே சுபமதிக்கு மணமாக நினைத்து வைத்திருக்கிறார். சுபமதி புவனேந்திரனை விரும்புகிறாள் என்பதை அறிந்த சுந்தரம், தன்னிடம் வலிப்பு நோய் இருப்பதாக கூறி விலகி நிற்கிறான். இதனால் பன்னீர்செல்வம் வேறு மாப்பிள்ளையை தேடத் தொடங்குகிறார்.
இந்நிலையில், சுபமதி புவனேந்திரனைத் திருமணம் செய்து கொண்டு வரும்போது, ஒரு விபத்தில் அவர் உயிரிழக்கிறார். பின்னர் தான் புவனேந்திரன் ஒரு நேர்மையற்ற நபர் என்பதை சுபமதி உணர்கிறாள். இதற்குப் பிறகு, சுந்தரத்தின் ஆதரவுடன் வேறு திருமணத்திற்கு சம்மதிக்கிறாள். திருமண மண்டபத்தில், கல்லூரி தோழனான ஷ்யாம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சிக்க, சுபமதி கோபத்தில் விளக்கை எடுத்து அவனை தாக்குகிறாள். அந்தக் குற்றத்தை சுந்தரம் தன் மீது ஏற்றுக்கொள்கிறான்.
இந்த சம்பவத்தை கண்ட பன்னீர்செல்வம் அதிர்ச்சியால் கோமா நிலைக்கு சென்று விடுகிறார். சுந்தரம் கைது செய்யப்படுகிறான். இதற்கிடையில், வீட்டிற்கு திரும்பும் சுபமதிக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது—இறந்ததாக நினைத்த புவனேந்திரன் உயிருடன் இருக்கிறான். பின்னர் அவன் விளக்குவது, தன்னுக்கும் தன் தம்பிக்கும் இரட்டையர் உறவு இருப்பதாகவும், விபத்தில் இறந்தது தம்பி தான் எனவும். இந்த திருப்பத்துடன், கதை மேலும் புதிய திசைக்கு நகர்கிறது.
நாவல் முழுவதும் இடையிடையே பல திருப்பங்களுடன் நகர்கிறது. வழக்கம்போல ராஜேஷ் குமார் தனது வேகமான கதைநடையால் வாசகர்களை ஈர்க்கிறார். கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை என்பதால், இன்னும் கொஞ்சம் இளமையின் கலகலப்புடன் எழுதப்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்றினாலும், மொத்தத்தில் இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவமாக அமைந்துள்ளது.
