இதற்கு முன் நான் உயரமாக நினைத்த எழுத்தாளர்கள் அனைவரும், இந்த நூலை வாசித்த பிறகு எனக்குள் பாகுபலி படத்தில் வரும் அந்தக் காட்சியை நினைவூட்டினர் பல்வாள் தேவனின் சிலைக்குப் பின்னால் உயர்ந்து நிற்கும் பாகுபலி சிலை போல புதுமைப்பித்தனும் என் சிந்தனையில் எழுந்து நின்றார்.
புத்தகத்தின் பக்கங்கள்: 160
வெளியீடு: மலர் புக்ஸ்
இதுதான் நான் படிக்கும் முதல் புதுமைப்பித்தன் புத்தகம். இதுவரை சுஜாதா, ராஜேஷ்குமார் போன்ற எழுத்தாளர்களின் நாவல்களைப் படித்து வந்த எனக்கு, இந்த நூல் முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. இந்தப் புத்தகத்தில் மொத்தம் 14 சிறுகதைகள் உள்ளன: காஞ்சனை, புதிய கூண்டு, வெளிப்பூச்சு, மகா மசானம், உணர்ச்சியின் அடிமைகள், நியாயம்தான், சுப்பையா பிள்ளையின் காதலர்கள், செல்லம்மாள், மோட்சம், தியாகமூர்த்தி, சாப விமோசனம், நியாயம், கட்டிலைவிட்டிறங்கா கதை, கடவுளும் கந்தசாமி பிள்ளையும்.
இந்தப் புத்தகம் முழுவதும் பொதுமக்களின் வாழ்க்கை, அவர்களின் சமூக நிலை மற்றும் வாழ்வியல் நெருக்கடிகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. புதுமைப்பித்தனின் பல கதைகளும் தென் மாவட்டங்களையும், அக்கால சென்னை நகரத்தையும் பின்னணியாகக் கொண்டுள்ளன. அவர் பிறந்ததும், படித்ததும் (B.A) திருநெல்வேலியில் என்பதும், அந்தத் தேச வாழ்க்கை அவரது கதைகளில் வெளிப்பட காரணமாக இருக்கலாம்.
அப்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகள் இணைந்த பிராந்தியம் என்பதும் நம்மால் ஊகிக்க முடிகிறது.
இந்தச் சிறுகதைகள் அனைத்தும் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன் எழுதப்பட்டவை. அதனால் அக்காலத்தின் ஜாதி அடக்கு, பசி, வறுமை, சமூகப் பிடிப்பு போன்ற சிக்கல்கள் மிகத் தெளிவாகவும் நேர்மையாகவும் இக்கதைகளில் புலப்படுகிறது.
அனைத்து கதைகளிலும் புதுமைப்பித்தனின் சொல்வளம், சொற்றேர்வு, வாக்கிய அமைப்பு ஆகியவை மிக எளிதாகப் பாய்ந்து செல்லும்; வாசகனாக நமக்கு எந்த முயற்சியும் தேவைப்படாது.
முதல் கதையாக வரும் காஞ்சனை, எனக்கு புதிய அனுபவம். நான் இதுவரை “காஞ்சனை” என்றால் அழகான பெண் என்ற உவமை என்று மட்டும் நினைத்திருந்தேன்; ஆனால் இக்கதையின் காஞ்சனை அதற்கு மாறான ஆச்சரியமான கதாபாத்திரம். இன்றளவும் கவிஞர்கள், பாடலாசிரியர்கள் இந்தச் சொல்லை உவமையாகப் பயன்படுத்துவது நினைவுக்கு வருகிறது.
புதிய கூண்டு என்ற இரண்டாவது சிறுகதை பிராமணர்கள், இந்துக்கள், ரோமன் கத்தோலிக்கர்கள், ப்ரோட்டஸ்டண்ட்கள் போன்ற சமய அடையாளங்களின் பின்னணியில் செதுக்கப்பட்டுள்ளது. அதில் வரும் சகோதரர்கள் கிட்டு மற்றும் அம்பி இருவரும் பிராமணர்கள் இவர்களை ஆசிரியர் அறிமுகப்படுத்தும் விதம் மிக அழகு. மூத்த சகோதரனை உணர்ச்சிவசப்பட்டவனாகவும், இளையவை அறிவால் முடிவுக்கு வருவானாகவும் விவரிக்கும் ஆசிரியரின் நுண்ணறிவு வாசகனை கவர்கிறது. பின்னர் வரும் ஜெயா மற்றும் சமயத்துக்காக காத்திருக்கும் கதாபாத்திரங்களும் நெகிழ்வூட்டும்.
அடுத்து என்னை மிகவும் பாதித்தது செல்லம்மாள் என்ற சிறுகதை. இது இன்று கூட உலகின் எங்கோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் குடும்ப நெருக்கடிகளை நினைவில் கொண்டு வருகிறது வறுமை, நோய், பொருளாதாரம், கணவன்-மனைவியின் உணர்ச்சி ரசாயனம் அனைத்தும் இயல்பாகப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக இறுதியிலான உரையாடல்கள், மனைவியின் அம்மாவை பார்க்கும் ஆசை, கணவனின் ஆறுதல் மற்றும் அந்த நொடிகளில் உருவாகும் உணர்ச்சிகள் வாசகனை நெகிழ்விக்கும்.
இறுதிப் பகுதியில் வரும் கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற கதை முற்றிலும் வேறு ஜானர். அக்காலத்தில் இது ஒரு புதிய முயற்சி. மனிதன் மற்றும் கடவுள் இடையிலான உரையாடலை சுவையாகவும் சிந்திக்க வைக்கும் முறையிலும் ஆசிரியர் வடிவமைத்திருக்கிறார்.
புதுமைப்பித்தனை “தமிழ் சிறுகதையின் தந்தை” என்று சொல்லப் பெறுவதில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது என்பதை இந்த நூல் வாசித்தபின் புரிந்துகொள்ள முடிகிறது. இதை முடித்த பிறகு ஆசிரியர் பற்றி மேலும் அறிய நம்மால் இணையத்தில் தேடாமல் இருக்க முடியாது.
