பக்கங்கள்: 104

ஆசிரியர்: பியோதார் தஸ்தயேவஸ்கி

திரைப்படமாக இருந்தாலும் சரி அல்லது ஒரு எழுத்து வடிவமாக இருந்தாலும் சரி பெண்களோ, ஆண்களோ தனது சோக உணர்ச்சியை மறைத்து அதை அழகாக வேறு வடிவத்தில் வெளிக்காட்டி முயல்வதும் அவ்வாறாக முயல்வதில் தோல்வி அடைவதையும் படம் பிடித்து அல்லது தன் எழுத்து வடிவத்தில் கொண்டு வருவது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் இதில் ஆசிரியர் அந்த கணங்களை மிக அழகாக கடத்தி அந்த உணர்வை நம்மில் உறுதி செய்கிறார்.

நமக்கு நம் வாழ்விலும் நாஸ்தென்கா போல் ஒரு கதாபாத்திரம் பள்ளி அல்லது கல்லூரி வாழ்க்கையில் இருந்திருந்தால், இந்த புத்தகத்தை படித்து முடித்த பின் அன்றைய நாளில் உறக்கமில்லாத இரவு உறுதி.

கதை சொல்லியாக வரும் இளம் ஆணின் வயது இருபத்தாறு. அவன் வாழ்க்கையை ரசித்து வாழ்பவன்; வீடு, ஜன்னல், வெளிச்சம், வண்ணங்கள் எனச் சிறு விஷயங்களில்கூட அழகைக் காணும் மனநிலை கொண்டவன். அவனது குணாதிசயங்கள் முதல் சில பக்கங்களில் நுட்பமாக வெளிப்படுகின்றன. ஒரு மாலை நேரத்தில், தூரத்தில் ஒரு பெண்ணைக் காண்கிறான்; அந்தக் கணமே அது அவனுக்கு ஒரு அதிசயமாகத் தோன்றுகிறது. அவளது தோற்றத்தை மனதில் ஊகிக்கிறான் கருமை நிற கேசம், மென்மையான நடை என்று. ஆனால் அருகில் சென்றபோது, அவள் விம்மி அழுவதைப் பார்க்கிறான். அதே நேரத்தில் இன்னொரு ஆண் அவளைப் பின்தொடர்ந்து வர, அவளது அழுகை மேலும் அதிகரிக்கிறது.

இவன் தயங்காமல் தலையிட்டு அவளை அந்த நிலைமையிலிருந்து காப்பாற்றுகிறான். தன்னை அறிமுகப்படுத்தி, தன் சுபாவம், உணர்ச்சிகளை அடக்கி வாழும் இயல்பு ஆகியவற்றை அவளிடம் வெளிப்படையாகச் சொல்கிறான். அவன் பேச்சில் உள்ள மென்மையும் நேர்மையும் அவளை ஈர்க்கிறது; பெண்களுக்கு கூச்ச சுபாவம் கொண்ட ஆண்கள் பிடிக்கும் என நாஸ்தென்கா கூறுகிறாள். அந்த உரையாடலே அவர்களுக்குள் ஒரு பரஸ்பர புரிதலை உருவாக்குகிறது.

நாஸ்தென்கா அவனின் பேச்சைக் கவனமாகக் கேட்கிறாள்; இவ்வளவு நேரம் பேசினாலும் அவன் தன் மீது காதலை வெளிப்படுத்தாததே அவளுக்குப் பிடித்ததாகச் சொல்கிறாள். இதைக் கேட்ட அவனும் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, அவளுக்கு நண்பனாகவே இருக்க முயல்கிறான். ஒரு உரையாடலில், அவளுக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாகவும், அவள் தானாகவே வந்து தன் காதலைச் சொல்லிருந்தாள் என்றும், ஒரு வருடம் கழித்து தான் வருகிறேன் என்று சொல்லிச் சென்றவன் என்றும் அவள் கூறுகிறாள். அந்த நாளிலிருந்து இன்றுவரை அவள் அவனை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள்; ஆனால் அவன் வருவதற்கான எந்தச் சுவடும் இல்லை.

பின்னர் அவள் ஒரு கடிதம் எழுதுகிறாள்; அதை பீட்டர்ஸ்பார்க்கில் இருக்கும் அவனிடம் கொண்டு சேர்க்குமாறு இவனிடம் கொடுக்கிறாள். இவனும் அதைச் செய்கிறான். ஆனால் பதில் வரவில்லை. இரண்டாம் இரவு, மூன்றாம் இரவு என அவள் காத்திருக்கிறாள், பிரார்த்திக்கிறாள், மனமுருகி அழுகிறாள். அவளது அந்த அழுகையைப் பார்த்ததும் இவனின் மனம் தாங்காமல் தன் காதலை வெளிப்படுத்திவிடுகிறான். நாஸ்தென்கா அதை ஏற்றுக் கொள்கிறாள்; பின்னர் அவன் வரமாட்டான் என்பது தெளிவானதும், மிகுந்த மனவேதனையுடன் “சரி, உன்னுடன் இருக்கிறேன்” எனச் சொல்கிறாள்.

இவன் அளவிட முடியாத மகிழ்ச்சியில் மூழ்குகிறான். நான்காம் நாள் இரவில் அவன் அவளுடன் கைகோர்த்து நடக்கும்போது, பின்னால் இருந்து ஒரு கை அவளின் தோளில் படுகிறது. திரும்பிப் பார்த்த கணமே அவனுக்கு அதிர்ச்சி அது அவள் காத்திருந்த காதலன். எந்தச் தயக்கமும் இன்றி நாஸ்தங்கா இவனை விட்டுவிட்டு அவன் தோளில் சாய்கிறாள். அந்தக் காட்சியைப் பார்த்தும் இவன் அவளை வெறுக்கவில்லை; அவனின் சுபாவமே அப்படி. அமைதியாக வீட்டுக்குத் திரும்புகிறான்.

பின்னர் நாஸ்தென்காவிடமிருந்து வரும் ஒரு கடிதத்தில், அவள் தன் தவறைச் சுட்டிக் காட்டி, தானும் அவள் கணவரும் அவன் வீட்டுக்கு வரப்போகிறோம் என்றும், தன் மீது வைத்திருந்த காதலை நினைவாக வைத்துக் கொள்ளுமாறு எழுதுகிறாள். இந்த நாவலைத் தழுவி பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், நாவலை வாசிக்கும் போது நம்முள் எழும் அந்த உணர்ச்சி பெருக்கம் எந்தப் படத்திலும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை என்பதே நிதர்சனம்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன