ரொம்ப நாள் கழித்து E-bookல் படித்த ஒரு அருமையான புத்தகம் இது. இந்தப் புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதை சரியாக யூகிக்க முடியவில்லை. ஆனால் இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள் மற்றும் விளக்கங்களை பார்த்தால், அது எழுதப்பட்ட காலத்திலேயே கண்டிப்பாக ஒரு முற்போக்கான படைப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. காரணம், இதில் தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் சுவாரஸ்யமாகவும் சிந்திக்க வைக்கும் வகையிலும் அமைந்துள்ளன.
இன்றைய காலகட்டத்தில் மனிதர்கள் எழுபது வயதைக் கூட சிரமமாக அடையும் நிலையில் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் புத்தகத்தில் 170 அல்லது 180 ஆண்டுகள் வரை வாழ்ந்ததாக கூறப்படும் சில மனிதர்களின் வாழ்க்கை முறைகள், அவர்கள் கூறிய கருத்துகள் மற்றும் அறிவுரைகள் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பின்பற்றிய வாழ்க்கை முறை என்ன, உடல்நலத்தை எவ்வாறு பேணினர் என்பதையும் ஆசிரியர் சுவாரஸ்யமாக எடுத்துரைக்கிறார்.
இந்தப் புத்தகத்தின் முக்கியமான கருத்து மூன்று அடிப்படை அம்சங்களை மையமாகக் கொண்டது. அவை உணவு, உழைப்பு, ஓய்வு என்பவையாகும். இந்த மூன்றையும் தனித்தனியான பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு தலைப்பிலும் அதற்கான முக்கியத்துவத்தை ஆசிரியர் விளக்குகிறார். குறிப்பாக உணவு மற்றும் உழைப்பு ஆகிய இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை பல அறிஞர்களின் கருத்துகளுடன் சேர்த்து தெளிவாக விளக்குகிறார்.
ஒரு மனிதன் செய்யும் உழைப்பிற்கு ஏற்பதான் அவன் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். உதாரணமாக, உணவில் உப்பை ஆரம்பத்தில் குறைவாக சேர்த்துக் கொண்டால், பின்னர் தேவைக்கு ஏற்ப ருசிக்கு ஏற்ப நாம் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் பசியெடுக்கும் நேரத்தில் நம் உடலின் தேவைக்கு ஏற்ப குறைவாக உணவு எடுத்துக்கொண்டு, பின்னர் தேவையெனில் மேலும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் ஆரம்பத்திலேயே தேவைக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டால் அது உடலுக்கு ஒரு சுமையாக மாறும். உடலுக்கு நாம் கொடுக்கும் இந்த அதிர்ச்சி, பின்னர் உடல்நல பிரச்சினைகளாக திரும்பி வரும் என்பதையும் ஆசிரியர் எச்சரிக்கிறார்.
மேலும் பல சான்றோர் தங்கள் வாழ்நாளில் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவையே எடுத்துக்கொண்டதாகவும் இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது. இன்றைய வாழ்க்கை முறையில் அது அனைவருக்கும் சாத்தியமாக இல்லாவிட்டாலும், நாம் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்பதையும் இந்த நூல் நினைவூட்டுகிறது. மொத்தத்தில், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான எளிய ஆனால் முக்கியமான வழிமுறைகளை நினைவூட்டும் ஒரு சிந்தனை தூண்டும் நூலாக இது அமைந்துள்ளது.
இந்த நூல் தற்கால இளைஞர்களுக்காகவே முன்தொரு காலத்தில் எழுதப்பட்டது என்றால் அதில் மிகை ஒன்றும் இல்லை.
