மயல் – Romantic Fantasy and Erotic Thriller ஜானர் பிரிவில் வரும் இந்த நாவல் கண்டிப்பாக படித்து முடித்தவுடன் நம் மனதில் மைய்யல் கொள்ளும், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்த கதையில் வரும் காட்டு வழி பாதை ஆகட்டும், இல்லை கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் காதல் மற்றும் கூடலாக இருக்கட்டும், நமக்கு ஒரு அபூர்வமான ரோலர் கோஸ்டர் உணர்ச்சி கண்டிப்பாக கொடுக்கும்.
பக்கங்கள்: 263
வெளியீடு: ஜீரோ டிகிரி
எழுத்தாளர் சிவராமன் அவர்களுக்கு இது முதல் நாவல். இந்த புத்தகத்தின் அட்டையின் மேல் உள்ள சொற்றொடர் ‘மயல்’, பார்த்ததுமே வாங்கிக் கொண்டேன். இது வாங்கும் போது ‘மயல்’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாவிட்டாலும், பின்பு மயல் என்றால் மயக்கம், மாயை, ஈர்ப்பு என தெரிந்து கொண்டேன்.
இந்த நாவலை எழுதும்போது ஆசிரியர் அவர்கள் தனது எழுதுகோலுக்கும் மனதிற்கும் ஒரு கால் கட்டு போட்டுத்தான் எழுதி இருக்க வேண்டும். காரணம், இந்தக் கதையில் வரும் சொல்லாடல், ஒவ்வொரு சொல்லுமே தனித்துவமாக உள்ளன. கண்டிப்பாக இலக்கிய ரெஃபரன்ஸ் இருக்கும் என நம்புகிறேன். நாம் எழுதும் எழுத்துக்கள் வாசகர்களுக்கு புரிய வேண்டும் எனும் ஒரு கண்ணோட்டத்தில் தனது இலக்கிய தெரிவுகளை கட்டுப்படுத்தி இக்கதைய அமைத்துள்ளார் என படிக்கும்போது தெரிய வருகிறது.
நாயகன் பற்றி ஒரு இரு வார்த்தைகள்:
நாயகன் ஒரு பிரில்லியண்ட் பெலோ. தமது தொழிலை எவ்வாறு முன்னெடுத்து கொண்டு வர வேண்டும் என்ற சிந்தனையோடு செயல்படுகிறான். அந்த சிந்தனை அவனது பேச்சுக்களிலும் செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கிறது. அவனுக்குள்ளே இருக்கும் ஒரே குறை – குறைந்த காதல் நிறைந்த காமம்.
இந்த கதையில் வரும் முதல் சில அத்தியாயங்களில் மூன்று நாயகிகள் உள்ளனர். கதையின் தலைப்புக்கு ஏற்றவாறு அவர்கள் எல்லாரிடமும் விழிப்புணர்வோடு காதல் கொள்கிறான். இந்த நிகழ்வுகள் வரும் அனைத்து இடங்களிலும் எழுத்தாளர் மனதில் எழும் உணர்ச்சியை நல்லதொரு எழுத்து வடிவம் கொடுத்து கொஞ்சமும் முகம் சுழிக்காமல் அருமையாக கதையை நகர்த்தி செல்கிறார்.
ஓரிடத்தில் கதாநாயகன் தம்மக்குள் ‘அவளின் இயக்கம் வேகம் எனக்கு மட்டும்தான் தெரியும்’ என்ற திமிர் எனக்குள்ளது என்று குறிப்பிடும் போது, அவர்களுக்குள்ளேயே என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லாமல் சொல்கிறார். எழுத்தாளருக்கு காதல் கதை எழுதுவதில் எந்த தணிக்கையும் தேவைப்படாது என தெளிவாக தெரிகிறது.
கதையின் பிற்பகுதியில் வரும் மாயக்காட்சிகளில் அனைத்திலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார் எழுத்தாளர்:
மதம் பிடித்த இரு யானைகளின் சண்டை காட்சிகள்
வித்தியாசமான உருவுள்ள கரடி
ஆற்றில் இருந்து நீர்சிற்பமாக வரும் யக்ஷி
பச்சை காடு, ஆரஞ்சு அருவி (புலியின் உவமை)
பேசும் தவளை
இதமாக வருடி கதையோட்டத்தில் அழுத்தம் கொடுக்கும் நகைச்சுவை என ஒரு பிரமாண்டம் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
போத்தி, தோட்டகள்ளன், நூற்றாண்டுக்கு முன் நடந்த ராஜாவின் கதை ஆகியவற்றை மிகச் சுவாரஸ்யமாக கொடுத்திருக்கிறார்.
இக்கதையில் ஆசிரியர் கூறிய கதை போக, மேலும் சிலவற்றை நாமே புரிந்துகொள்ளலாம்:
மனிதனின் தன்னை கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியின் உளவியல்கள்
இது ஒரு ஆர்த்தடாக்ஸ் குடும்பத்தின் பின்னணியில் நடக்கும் கதை என்றாலும், லேசாக தொட்டு செல்லும் பெண் அடிமை போன்றவற்றை நாமே புரிந்துகொள்ளலாம்.
