“நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்” — இந்த ஒரு வரியே இந்த புத்தகத்தின் மையம். படிக்கத் தொடங்கும் முன்பே அது நம்மை சற்றே தடுக்கச் செய்கிறது. சிந்திக்காமல் மனிதன் வாழ முடியுமா? என்ற கேள்வி உடனே மனதில் எழுகிறது. ஆனால் அதுவே இந்த புத்தகத்தின் முதல் வெற்றி.

Don’t Believe Everything You Think என்ற இந்த நூல், ஜோசப் நுயென் எழுதிய 163 பக்கங்களிலேயே, மனித மனதின் பழக்கப்பட்ட சிந்தனைச் சுழற்சியை மெதுவாக உடைத்து விடுகிறது.

“நீ எதற்கு என்னை காதலிக்கிறாய்?” என்ற காதலனின் கேள்விக்கு, “தெரியல” எனக் கூறும் காதலியின் பதில், காதலனை இரண்டு நாட்களாக தூங்கவிடாமல் செய்கிறது. அதே கேள்வியை அவள் கேட்கும் போது, அதற்குத் தகுந்த பதில்கள் அவனிடம் வரிசைக்காட்டிக்கொண்டு நின்றன.

ஒரு திரைப்படத்தில், ஒரு சிறுவன் காலில் துப்பாக்கி குண்டு பட்டு சிகிச்சை பெறும் போது, கதாநாயகன் “வலிக்குதா?” என்ற கேள்விக்கு “ஆமாம்” என்று சொல்வான். பின்னர், “அதையே யோசிக்காதே, இன்னும் ரொம்ப வலிக்கும்” என்ற அறிவுரையையும் கூறுவான். இந்த காட்சி மிகுந்த கவனம் பெறுகிறது.

மேலே கூறப்பட்ட இந்த இரண்டு நிகழ்வுகளையும் உள்ளடக்கியதே இந்த புத்தகம்.

சிந்தித்தல் மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு தனித்துவமான குணம். அது பரிணாம வளர்ச்சியில் எவ்வாறு உருவானது என்றால்….

மனிதனுக்கு துன்பம் நேரும் போதும், உயிருக்கு ஆபத்து வரும் போதும் மட்டுமே அவனை சிந்திக்கச் செய்தது மனம். அந்த நேரத்தில் உருவாகும் படபடப்பு, குழப்பம், adrenaline சுரப்பு — இவை எல்லாம் fight or flight என்ற நிலைதான்.

அது அப்போதைய கால வாழ்க்கைக்கு மிகவும் தேவையானதும் அவசியமானதும். ஆனால் இன்றைய வாழ்வியல் சூழலில் இது அர்த்தமற்றதாக மாறிவிட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.

புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியவுடன் எனக்கு பல முரண்கள் தோன்றின. ஆனால் படித்து முடித்தபோது, என் மனம் அதை ஏற்றுக்கொள்ளவே செய்தது.

எண்ணம்

சிந்தனை

முதல் ஒன்றை தெய்வீகமானது என்றும், இரண்டாவதை தன்முனைப்பு என்றும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

எண்ணம்:

எண்ணத்தைப் பின்தொடரும்போது மனிதன் நிம்மதி, மகிழ்ச்சி மற்றும் பிற நேர்மறை உணர்ச்சிகளை அனுபவிக்கிறான்.

உதாரணமாக, நமக்கு மிகவும் பிடித்த வேலையைச் செய்து கொண்டிருக்கும்போது நேரம் எவ்வாறு சென்றது என்பதே நமக்குத் தெரியாது. அலுவலகத்தில் இப்படியான அனுபவத்தை நாம் பலமுறை சந்தித்திருக்கலாம். நம் சக பணியாளர் (co-worker) ஓய்வு நேரத்திற்கு அழைக்கும் போது தான், “அட, நேரம் இவ்வளவு ஆகிவிட்டதே!” என்று உணர்வோம். இது நம் மனத்தின் கவனம் மற்றும் எண்ணத்தின் விளைவு.

சிந்தனை:

ஆனால் முன்பு கூறியதுபோல், ஆபத்துக்கும் துன்பத்துக்கும் அப்பால் மனிதன் சிந்திக்கத் தொடங்கினால், அவன் நிம்மதியை இழக்கிறான்.

இந்த கருத்திற்கு பல எடுத்துக்காட்டுகளை வழங்கி ஆசிரியர் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

நமக்கு துன்பம் வரும் போது அது அலை போல வருகிறது. முதல் அம்பு தான் நம்மை காயப்படுத்துகிறது அதற்கு நம்மிடம் கட்டுப்பாடு இல்லை. இரண்டாவது அம்பு நம் மன அமைப்பை சார்ந்தது. அதற்கு முழுக் கட்டுப்பாடு நம்மிடம் இருந்தும், நாம் அதனால் வேதனைப்படுகிறோம்.

பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட இரண்டு நிகழ்வுகளும் இதையே விளக்குகின்றன. காதலி தன் காதலனை unconditional love (எண்ணம்) செய்கிறாள். ஆனால் காதலனிடம் காரணங்கள் இருக்கலாம் — அழகு, அறிவு, பணம் போன்றவை.

இந்த கருத்தை நாம் நடைமுறையில் பயிற்சி செய்யும் போது வரும் இடர்பாடுகள் என்ன, அவற்றை எவ்வாறு கடக்க வேண்டும், அதைக் கடந்தபின் நாம் அடையும் மாற்றங்கள் என்ன என்பதை ஆசிரியர் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

அனைவருக்கும் இது ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நம் வாழ்க்கையில் எப்போதும் ஏன் இப்படித்தான் நடக்கிறது என்ற கேள்விக்கான பதில்கள் இதில் உள்ளன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன