நாம் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் போது, மூளையில் உள்ள neurons (நரம்பு செல்கள்) ஒன்றோட ஒன்று புதிய connections (synapses) உருவாக்கி, ஒரு “neural network” அமைப்பை உருவாக்கும் என கூறுகின்றனர். அந்த அளவுக்கு, இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும் நேரத்தில், நம் மூளையில் ஒரு compulsive neural network கண்டிப்பாக உருவாகும் என நான் நம்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் பொது மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளை செம்மை படுத்த முடியாமல், தங்களின் மூளையில் தொடர்ச்சியாக சில தலைப்புகளை அடுக்கிக்கொண்டே இருக்கிறார்கள் — சினிமா, அரசியல், கிரிக்கெட், ரீல்ஸ், ‘வியூஸ்’ போன்றவை.
இவற்றின் பிரதிபலிப்புகள் நம் வாழ்விலும் தெளிவாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் மிகச்சிலவையே ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் அரசியல் தலைவர், மூன்று மணி நேரத்தில் முடிந்து விடும் சினிமா, ஒரே நாளில் தீர்ந்து விடும் கிரிக்கெட் போட்டி, சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் சமூக ஊடக காணொளிகள்.
இவ்வளவு தற்காலிகமான விஷயங்கள் நடுவில், இந்தப் புத்தகத்தைப் படிக்கத் தேர்வு செய்வது என்பது, இதில் நிறைந்துள்ள அறிவியல் உண்மைகளுக்காகவே என்பதைச் சொல்ல வேண்டியது.
புத்தகத்தின் பக்கங்கள் :187
வெளியீடு: ஸிரோ டிகிரி பப்ளீசிங்
இப்புத்தகத்தின் ஆசிரியர் ரிஷி ரமணா — தடவியல் (Forensics) துறையில் நீண்ட கால அனுபவம் கொண்டவர். வேதியல் துறையில் முனைவர் பட்டம் (Ph.D), குற்றவியல் துறையில் முதுகலை பட்டம் (MA Criminology), மேலும் பயோடெக்னாலஜியில் டிப்ளமோ பெற்றவர்.
தனது கைதேர்ந்த எழுத்துக்களின் மூலம், நம்மையும் நம் பிள்ளைகளையும் கூட சில மணி நேரங்களுக்கோ அல்லது ஒரு-இரு நாட்களுக்கோ இந்த துறையையோ இந்த படிப்பையோ விரும்பும் அளவிற்கு ஆட்கொள்ளும் திறன் இவருக்கு உள்ளது. உண்மையில் இதுவே இந்த புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி என சொல்லலாம்.
ஆசிரியர் தனது முன்னுரையில், தடவியல் துறையில் இதுவரை அதிகமான புத்தகங்கள் வெளிவராததற்கான ஒரு முக்கிய காரணமாக, “குற்றவாளிகள் தடவியல் துறையின் ஸ்டாண்டர்ட் ஆபரேஷன் ப்ரோசீஜர் (SOP) பற்றி தெரிந்து கொள்ளக் கூடாது” என்ற அச்சம் இருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால் எனது பார்வையில், ஏற்கனவே குற்றவாளியாகி விட்டவர்கள் வேறு; குற்றம் செய்யும் முன் இருக்கும் மனிதர்கள், அதாவது தங்கள் உணர்ச்சிகளை முறையாக கையாள தெரியாதவர்கள், இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது, பல ‘குற்றங்கள்’ தொடக்க கட்டத்திலேயே மனத்தில் தோன்றும் “passing clouds” போல் மறைந்து போகும் என்பதே உண்மை.
அறிவியல் பொதுவாக நம்மை ஓசோன் அடுக்கு சேதம், மாசு, உடல் நல பிரச்சனைகள் போன்றவற்றின் மூலம் பயமுறுத்தி எச்சரிக்கும். ஆனால் இந்தப் புத்தகத்தில், நாம் செய்யும் தீமைக்கும் அதிலிருந்து தப்பிக்க வேண்டி நாம் செய்யும் செயல்களும் பெரும்பாலும் அர்த்தமற்றவை என்பதைக் கூர்மையாகவும் அறிவியலின் உதவியோடு எளிதாகவும் விளக்கியிருக்கிறார்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய காலக்கட்டம் வரை தடவியலின் பரிணாமத்தை ஆசிரியர் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறார். “You too, Brutus” போன்ற ஷேக்ஸ்பியர் வரிகளிலிருந்து, சிலப்பதிகாரம் கோவலனின் கொலை, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை , டெல்லி வன்புணர்வு வழக்கு, நுங்கம்பாக்கம் கொலை, அர்கென்டினாவில் நடந்த பிரான்சிஸிக்கா ரோஜாஸ் உள்ளிட்ட பல வரலாற்று மற்றும் நவீன குற்றச்சம்பவங்களைக் கொண்டு, தடவியல் எப்படி செயல்படுகிறது என்பதை தொடர்ந்து விளக்குகிறார்.
ஒரு மரணத்தில் இறப்புக்கான காரணம் என்ன? எந்த காயங்கள் ஏற்பட்டது? உயிரை பறித்தது எந்த காயம்? குற்றவாளி யார்? — என்ற கேள்விகளை வைத்து தடவியல் எப்படிப் பதில்கள் தேடுகிறது என்பதை நம் முன் விரித்துக் காட்டுகிறார்.
ஒரு உண்மைச் சம்பவத்தில், ஒரு மனிதர் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் கண்டுபிடிக்கப்படுகிறார்; மேலும் சந்தேகம் உடனே அவரின் முன்னாள் மனைவியின் பார்வையற்ற மகன் மீது செலுத்தப்படுகிறது. சுவரில் இரத்தக் கறைகள் இருந்ததால், “பார்வையற்றவன் தப்பிக்கும்போது கையை சுவரில் வைத்ததால் இப்படியாகிவிட்டது” என்று சுற்றியவர்கள் நம்ப ஆரம்பித்தார்கள்.
ஆனால் தடவியல் நிபுணர்கள், சுவரில் இருந்த கைச்சுவடுகள் போன்றவற்றைக் கவனமாக ஆராயும்போது ஒரு முக்கியமான உண்மை வெளிப்படுகிறது: பார்வையற்றவர்கள் வழி தேடும் போது சுவரில் துல்லியமான கைச்சுவடு வைக்க முடியாது; அவர்கள் சுவரை தடவி வழி தேடுவார்கள். ஆனால் இங்கு இருந்த கைச்சுவடுகள் தெளிவாகவும் திட்டமிட்டதாகவும் இருந்தது.
இந்த சின்ன observation-ஐ அடிப்படையாக வைத்து, காவல்துறையினர் உண்மையான குற்றவாளியை நோக்கி விசாரணையைத் திருப்புகிறார்கள். கொலையின் பின்னணி சொத்து என்பது உறுதியாகும்.
தடவியலில் வரும் ஆதாரங்கள் (Forensic Evidence) நம்மால் யூகிக்க முடியாத அளவிற்கு ஆழமான அறிவியல் அடிப்படையோடு செயல்படுகின்றன. குற்றவாளிகள் தப்பிக்கலாம்; ஆனால் நிரபராதிகள் தண்டனை அனுபவிக்கக்கூடாது என்னும் சட்டத்தின் சகிப்புத்தன்மையையும் இந்தப் புத்தகம் காட்டுகிறது.
ஆசிரியர் முதலில் “இறப்பு என்றால் என்ன?” என்பதையே அடிப்படையில் விளக்குகிறார். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் போன்ற அடிப்படை கூறுகளின் கோணத்தில், கொல்லப்பட்டவர்கள் கொலைக்கு முன்பும் பின்னும் எப்படிப் பார்க்கப்படுகிறார்கள் என்பதையும் விவரிக்கிறார்.
கைரேகை எவ்வாறு எடுக்கப்படுகிறது, அதன் வகைகள் என்ன, UIDAI (ஆதார் authority) கைரேகை தகவல்களை குற்ற விசாரணைக்காக வழங்காது போன்ற ஆச்சர்யமான தகவல்களும் உள்ளன. ஒரு மனிதனின் உடல் பாகங்கள் கிடைத்தால்கூட, கைகளின் நீளம் = உயரம் என்ற கணக்கீட்டின் மூலம் கொல்லப்பட்டவரின் உயரம் வரை கண்டுபிடிக்கலாம் என ஆசிரியர் காட்டுகிறார்.
தூக்கில் இறப்பு பற்றிய பகுதியை வாசிக்கும்போது, யாரும் அதை கனவில் கூட முயற்சிக்க விரும்பமாட்டார்கள்; மேலும் தூக்கில் தொங்கியபோது உயிரோடு இருந்தாரா, இறந்தபின் தொங்கவைக்கப்பட்டாரா என்பதைக் கண்டுபிடிக்கும் அறிவியல் முறைகளும் ஆச்சர்யமாக உள்ளன.
அதேபோல தண்ணீர் மற்றும் தீ மூலம் ஏற்படும் இறப்புகளிலும்:
• தண்ணீரில் விழுந்தபின் இறந்தாரா?
• இறந்த பிறகு தண்ணீரில் தூக்கி போடப்பட்டாரா?
— என்பதைக் கூட பாசி, நுரை, ஈரல் உள்ள நீர் போன்ற அடிப்படைகளில் அறிவியல் தீர்மானிக்கிறது.
தீயில் கருகி இறப்பவர்கள் பெரும்பாலும் asphyxial death காரணமாக உயிரிழக்கிறார்கள்; அதில் உள்ள கொலை சாத்தியங்கள், கொல்லப்பட்டபின் எரிக்கப்பட்டாரா? போன்ற கோணங்களை, எந்த துறையிலும் பயின்றவர்கள் அல்லாத நம்மைப் போன்ற வாசகர்களுக்கும் புரியும்படி எடுத்துரைக்கிறார் — அதுவும் ரூ.230க்கு கிடைப்பது நம்ப முடியாத அனுபவம்.
முன்பு கூறியது போல:
கை ரேகை
பாத வடிவம்
நடை பாவனை
DNA (இதை பற்றி பேச வேண்டுமானால் தனி வலை பக்கமே வேண்டும், படித்த பின் நம்மை நாம் ஒரு genetic engineer என்ரே நம்மை நாம் சில மணி துளிகளுக்கு பாவித்து கொள்வோம்)
பூச்சிகள்
நீரில் உள்ள பாசிகள்
சிந்தி தெரித்த ரத்தம்
வெடித்த துப்பாக்கியின் எச்சங்கள்
வெடி பொருட்கள்
கணினி தடவியல்
என எல்லா துறையையும் அலசி இருக்கிறார்.
இவ்ளோ அறிவை கடத்திய பிறகும் இன்னும் சொல்லப்படாத விஷயங்கள் ஏராளம் என இன்னும் ஆச்சர்யமூட்டுகிறார்.
இறுதியில் இந்த துறையில் உள்ள வேலை வாய்ப்பு பற்றியும் கூறிருக்கிறார்.
நாம் எப்போதும் தொலைக்காட்சி அல்லது சமூக வலைத்தளத்தில் வரும் குற்றம் சம்பந்தமான செய்திகளை படிக்கும் போது, இந்தப் புத்தகத்தை வாசித்த பின் சமூக குற்ற நிகழ்வுகளை அறிவியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் பார்வைக்கு நம்மை அழைத்து செல்லும்.
