புத்தகத்தின் பெயர்: சிச்சு புறா
ஆசிரியர்: அல்கா
மொழி: மலையாளம்
தமிழாக்கம்: சுகானா
பக்கங்கள்: 64
வகைமை: நாவல் / குழந்தைகள் இலக்கியம்
“சிச்சு புறா” என்பது மிகவும் எளிமையானதோடு சிந்திக்க வைக்கும் ஒரு அழகான சிறுநாவல். இந்த நூலை எழுதியபோது ஆசிரியரின் வயது வெறும் 12 என்பதே இதன் மிகப்பெரிய ஆச்சரியம். மேலும், இந்த நூலுக்கு இயக்குனர் பாலு மகேந்திரா முன்னுரை எழுதியிருப்பது இதன் முக்கியத்துவத்தை மேலும் உயர்த்துகிறது.
இந்தக் கதை குழந்தைகளுக்கு ஒரு சிறந்த bedtime story ஆக இருக்கும். கதையின் மையத்தில் சிச்சு என்ற வெண்புறா இருக்கிறது. அது தனது பெற்றோரைத் தேடி, தனது காட்டைத் தாண்டி மற்றொரு காட்டிற்கு பறந்து செல்ல வேண்டும் என்பதோடு, புறாக்களின் அடையாளமான அமைதியை உலகிற்கு பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடனும் பயணிக்கிறது. தனது கூட்டத்தாரின் அனுமதியையும், தேவதைகளின் தலைவியின் ஆசீர்வாதத்தையும் பெற்று, கொடிய மிருகங்கள் வாழும் ஒரு பயங்கரமான காட்டிற்குச் செல்கிறது.
அந்தக் காட்டில் சென்றவுடன், அங்கே நடக்கும் கொடுமைகளை கண்டு சிச்சு கவலையடைகிறது. அங்கு முயல், குரங்கு, கரடி போன்ற மிருகங்களுடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டு, அந்த காட்டில் கொடுங்கோலாக ஆட்சி புரியும் கர்க்கன் என்ற சிங்கத்தை வீழ்த்த ஒரு திட்டத்தை அமைக்கிறது. எல்லா மிருகங்களும் ஒன்றிணைந்து அந்த சிங்கத்தை அருவியில் தள்ளி கொன்று, அந்த காட்டிற்கு விடுதலை கொடுக்கின்றன. இதனால், மற்ற மிருகங்கள் அனைத்தும் சிச்சுவை பாராட்டி, அதை அதன் காட்டிற்கு திரும்ப அனுப்புகின்றன.
ஆனால், திரும்பிச் செல்லும் வழியில் சிச்சு ஒரு வேடனின் கண்ணில் சிக்கி, துப்பாக்கி குண்டால் காயமடைந்து விழுகிறது. அந்த செய்தி மற்ற பறவைகளிடம் பரவினாலும், யாரும் உதவ முன்வரவில்லை. காரணம் — தங்களது பிள்ளைகள் அநாதையாகிவிடக் கூடும் என்ற பயம். இறுதியில், உதவி இல்லாமல் சிச்சு அங்கேயே உயிரிழக்கிறது.
இந்த முடிவு மிகவும் உணர்ச்சிகரமானது. அமைதி, அன்பு, தியாகம் போன்ற உயர்ந்த மதிப்புகளை பரப்பி வாழும் சில உயிர்கள், இறுதியில் தனிமையில் முடிவடைகின்றன என்பதை இந்தக் கதை நினைவூட்டுகிறது.
இந்த நாவல், வெண்புறாவை அமைதியின் சின்னமாக காட்டுகிறது. மற்ற சாம்பல் நிற புறாக்கள் அந்த அளவிற்கு சித்தரிக்கப்படாதது கூட ஒரு குறியீடாகவே தோன்றுகிறது.
மொத்தத்தில், “சிச்சு புறா” என்பது குழந்தைகளுக்கான ஒரு எளிய கதை மட்டுமல்ல; மனித வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை சின்னங்களின் மூலம் கூறும் ஒரு மனதை தொடும் படைப்பு.
