144 பக்கங்களை கொண்ட இந்த புத்தகம், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த மனித இனத்தின் குழந்தை வளர்ப்பு முறைகளை, இக்காலத்திற்கு ஏற்ப மனித வாழ்க்கையின் எல்லா நெளிவு-கழிவுகளையும் ஆராய்ந்து திறம்பட விளக்கியுள்ளது.

இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு (First Edition) ஜூன் 2008. இதில் ஆசிரியரின் முன்னஞ்சல் முகவரி மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதைத் தவிர ஆசிரியர் பற்றி எந்தவிதமான முன்னுரை அல்லது தகவலும் இல்லை. இதனால் ஆசிரியர் ஒரு மருத்துவரா, அல்லது சைக்காலஜி படித்த ஒரு தொழில்முறை நிபுணரா என்பதில் தெளிவு கிடைக்கவில்லை.

இருப்பினும், “படைப்பாளியை விட படைப்பே சிறந்தது” என்ற காரணத்தால், நாம் நேராக நூலின் உள்ளடக்கத்திற்குச் சென்று விடலாம்.

இந்தப் புத்தகம் பெற்றோரிடமிருந்து ஆரம்பித்து எல்லா திசைகளிலும் பயணிக்கிறது. அதாவது, குழந்தை பிறந்த முதல் மாதத்திலிருந்து பதின்ம பருவம் வரை பல்வேறு நிலைகளை ஆராய்ந்து, பெற்றோருக்கான சில முக்கியமான அறிவுரைகளை சற்று கடுமையாகவே ஆசிரியர் கூறுகிறார். சில நேரங்களில் நமக்கும் இப்படிப்பட்ட காரமான விமர்சனங்கள் தேவைப்படுகின்றன என்ற எண்ணம் மனதில் தோன்றுகிறது.

குடும்பத்தில் இருக்கும் முதல் குழந்தை மற்றும் இளைய குழந்தைகள் பற்றியும் ஆசிரியர் விளக்குகிறார்.

முதல் குழந்தை:

ஆரம்பத்தில் முதல் குழந்தைக்கு அதிகமான அன்பும் கவனமும் கிடைக்கிறது. ஆனால் அடுத்த குழந்தை பிறந்தவுடன், அதே முதல் குழந்தையிடம் முழுமையான பொறுப்பும் சரியான நடத்தை (perfectness) என்பதையும் எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறோம். முதல் குழந்தை தனது பெற்றோரிடமிருந்து பெற்ற அனுபவங்கள், இரண்டாம் குழந்தை வந்த பிறகு முற்றிலும் மாறுபட்டதாகி விடுகின்றன. இதனால் அந்த குழந்தையின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியுள்ளார்.

Screen Time:

குழந்தைகள் கைப்பேசி, தொலைக்காட்சி, லேப்டாப் போன்றவற்றில் அதிக நேரம் செலவழிப்பது அவர்களின் Cognitive Behaviour-ஐ எவ்வாறு பாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார்.

குறிப்பாக, குழந்தைகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவான Instagram Reels போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அது அவர்களின் மனதில் பொறுமையின்மையை உருவாக்குகிறது. இதன் விளைவாக, பள்ளிப் பாடங்களில் உள்ள 5 அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளைக் கொண்ட பதில்களை படிப்பதிலும் புரிந்துகொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

பெற்றோரின் அணுகுமுறை:

தாய் மற்றும் தந்தை குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் விதம் முதல், அவர்களுக்கிடையில் ஏற்படும் சண்டை-சச்சரவுகள் வரை அனைத்தும் குழந்தைகளின் மனநிலையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை ஆசிரியர் துல்லியமாக பதிவு செய்கிறார்.

பிறந்த பிறகு தாய்மார்களின் நிலை:

பிள்ளை பெறுவதற்கு முன் இருந்த வாழ்க்கை மற்றும் பிள்ளை பெற்ற பிறகு இருக்கும் வாழ்க்கை ஒன்றாக இருப்பதில்லை. குறிப்பாக குழந்தை பிறந்த பிறகு, சொந்தக்காரர்களின் அறிவுரைகள் மற்றும் சிபாரிசுகள் பல நேரங்களில் தாய்மார்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகின்றன. குழந்தையின் அழுகை மற்றும் அதன் காரணங்களைப் பற்றி தெளிவாக விளக்கி, பல பயனுள்ள கருத்துகளை ஆசிரியர் வழங்குகிறார்.

மேலும், தெரிந்தவர்களிடமிருந்தும் தெரியாதவர்களிடமிருந்தும் குழந்தைகள் அனுபவிக்கும் பார்வைகள், தொடு உணர்வு போன்றவற்றையும் ஆசிரியர் விரிவாக எடுத்துரைக்கிறார்.

மேலே குறிப்பிட்டவை இந்த புத்தகத்தில் உள்ள கருத்துகளில் மிகச் சில மட்டுமே. இதில் அறிவியல் அடிப்படையிலான பல முக்கியமான தகவல்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. இதை படித்து முடித்த பிறகு, நம் குழந்தைகளைப் பற்றிய நமது பார்வை மாறுவது உறுதி.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன